அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறி உள்ளனர்.கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர்-2 வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை சந்தித்தார்.
இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஷரபோவா 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்ற போட்டிகளில் சீனாவின் லீ நா, போலாந்தின் ரத்வன்ஸ்கா, ஜேர்மனியின் கெர்பர், செர்பியாவின் இவானோவிச், ஜேர்மனியின் ஜூலியா, ரஷ்யாவின் எகடரினா மகரோவா உள்ளிட்டோர் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் நம்பர்-1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் ஸ்டேபானக்கை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் ஸ்பெயினின் டேவிட் பெரர், செக் குடியரசின் தாமஸ் பெர்டிக், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், செர்பியாவின் ஜான்கோ டிப்சர்விச், ஜப்பானின் கெய் நிஷிகோரி ஆகியோர் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பாப் பிரையன் ஜோடி, அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், லூக் ஜோடியை சந்தித்தது.
இதில் அசத்திய சானியா ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.





|